அமைதியாக கூடும் மசோதாவை விவாதிக்க மக்களவை தயாராகும் வேளையில் அதன் எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதை ஆட்சேபம் செய்துள்ளனர்.
அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். அந்த ஆட்சேபக் கூட்டத்தை நடத்திய சிவில் சமூகப் போராளிகளை ஒன்று கூடும் சுதந்திரத்துக்கான இயக்கம் என்னும் அமைப்பு (FAC) தலைமை தாங்கியது.
நாடாளுமன்றக் கட்டிட நுழைவாயிலுக்கு முன்னால் கூடிய அந்தப் போராளிகள் அந்த மசோதா நிபந்தனை ஏதுமின்றி மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரினார்கள்.
அந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த அளவிலேயே போலீஸ் நிறுத்தப்பட்டிருந்தது பலருக்கு வியப்பைத் தந்தது.
"அந்த மசோதா அரசமைப்புக்கு முரணானது, ஒடுக்குமுறையானது. ஆகவே கொடூரமான அந்த மசோதாவை நாடாளுமன்றம் உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என சுவாராம் ஒருங்கிணைப்பாளர் இ நளினி கூறினார்.
"போலீஸ் அனுமதிகள் தேவை என்பதை மேலோட்டமாக நீக்கி விட்டு அது நியாயமற்ற கட்டுப்பாடுகளையும் அதிகமான அபராதத்தையும் விதிக்கிறது. அதனால் அது போலீஸ் சட்டத்தில் உள்ள நடப்புக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும் மோசமானவை", என அவர் மேலும் சொன்னார்.
அந்த மசோதா சுதந்திரமான சமூகம் ஒன்றின் நலன்களை சீரழிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், சமூக சுதந்தரங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்றும் பொது மக்களுடைய பொது அறிவையும் விவேகத்தையும் அவமானப்படுத்துகிறது என்றும் அவர் சாடினார்.
அவருடன் பெர்சே எனப்படும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டமைப்புத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் அதன் நடவடிக்கைக் குழுத் தலைவர் வோங் சின் ஹுவாட்-டும் கோமாஸ் எனப்படும் சமூகத் தொடர்பு மைய்யம், ஜெரிட் என்ற மக்கள் நடவடிக்கை கட்டமைப்பு ஆகியவற்றின் பேராளர்களும் காணப்பட்டனர்.
கொடிகளும் மஞ்சள் நிற சுவரொட்டிகளும்
50 ஆதரவாளர்கள் ஜாலுர் கெமிலாங் தேசியக் கொடியை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தனர். ஒன்று கூடும் சுதந்திரம் மீதான அரசமைப்பின் 10வது பிரிவு வாசகம் அச்சிடப்பட்ட மஞ்சள் நிற சுவரொட்டியையும் அவர்கள் பிடித்திருந்தனர்.
"அந்த மசோதா கொடுமையானது. அது உடனடியாக மீட்டுக் கொள்ளப்படும் என நாங்கள் நம்புகிறோம். அந்த மசோதா ஒன்று கூடுவதற்கு அனுமதி அளிக்கிறது என தயவு செய்து ஒரு நிமிடத்துக்குக் கூட நம்ப வேண்டாம்", என்றார் அம்பிகா.
"அந்த மசோதா ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை பறிக்கிறது என்றே நான் கருதுகிறேன். ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தொடர்பில் அரசமைப்புப் பிரிவு வழங்குகின்ற உரிமையை அது பறித்துக் கொள்கிறது," என அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் சொன்னார்.
புதிய மசோதா போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவைக் காட்டிலும் மோசமானது எனச் சாடிய அம்பிகா, செப்டம்பர் 15ம் தேதி மலேசியா தினத்திற்கு முதல் நாளன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்த சீர்திருத்தங்களுக்கு முரணாகவும் உள்ளது என்றார்.
"நாம் ஒன்று கூடும் சுதந்திரத்துக்கான உரிமை மீது நம்பிக்கை வைத்திருப்பதால் நாம் மென்மேலும் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தைப் பிரதமரது அறிவிப்பு ஏற்படுத்தியது. அந்த மசோதா நல்லதல்ல. அதனைத் திருத்தக் கூட முடியாது. ஆகவே அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்," என அம்பிகா வலியுறுத்தினார்.
அந்த ஆட்சேபத்தில் பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அந்த மசோதா ஒடுக்குமுறையானது என கண்டிப்பதில் இணைந்து கொண்டனர்.
நஜிப் அளித்த வாக்குறுதி மக்களை "ஏமாற்றுவதற்கான பொய்" என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வருணித்தார்.
அது அரசமைப்புக்கு ஏற்ப இருக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆயுதங்கள் ஏதுமின்றி அமைதியாக ஒன்று கூடுவதற்கு அரசமைப்பு உரிமை வழங்குகிறது என்றார் அவர்.
"அந்த மசோதா போலீசாரின் வாழ்க்கையை மேலும் எளிதாக்குகிறது. காரணம் அவர்கள் இனிமேல் போலீஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டியதில்லை", என்றார் அருட்செல்வன்.
எதிர்ப்பு கடுமையாக இருந்த போதிலும் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்துக்கு மலேசியர்கள் இன்னும் தயாராகவில்லை என அந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். அத்தகையச் சுதந்திரம் பல இன நாட்டுக்கு பேரிடரைக் கொண்டு வரும் என அவர்கள் எண்ணுகின்றனர்.
Tiada ulasan:
Catat Ulasan